உலகளாவிய நகரத் திட்டத்தின்கீழ் உருவாகும் இந்தியாவின் ஆக உயரமான கட்டடம்

உலகளாவிய நகரத் திட்டத்தின்கீழ் உருவாகும் இந்தியாவின் ஆக உயரமான கட்டடம்

படம்: லாரிசா

07 Jun 2026 - 5:06 pm

2 mins read

குருகிராம்: இந்தியாவின் ஆக உயரமான கட்டடம் ஹரியானா மாநிலத்தில் அமைய உள்ளது.

‘உலகளாவிய நகரம்’ என்ற பெயரில் அம்மாநில அரசு செயல்படுத்த உள்ள இத்திட்டத்தின்கீழ் இந்தக் கட்டடம் குருகிராம் பகுதியில் உருவாக இருப்பதாக அம்மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருளியல் வளர்ச்சி, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, ஹரியானாவின் குருகிராம் பகுதியில் ஏறக்குறைய 1,000 ஏக்கர் பரப்பளவில், ‘உலகளாவிய நகரம்’ என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது ஹரியானா அரசு.

இது பல்வேறு அனைத்துலக நிறுவனங்களையும் உலகளாவிய முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் மிகப்பெரிய வணிக மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லி, பெங்களூரு, மும்பையைச் சேர்ந்த பல்லேறு முன்னணி சொத்துச் சந்தை (ரியல் எஸ்டேட்) நிறுவனங்களுடன் மேற்கொண்ட தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு தனது திட்டத்துக்கு ஹரியானா அரசு முழு வடிவம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

குருகிராம் நகரின் மையப்பகுதியில் ‘உலகளாவிய நகரம்’ திட்டத்துக்கு 6.7 ஏக்கர் பரப்பில், 2,000 முதல் 2,300 அடி உயர பிரம்மாண்ட வணிக, குடியிருப்புக் கோபுரத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக ஹரியானா மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ள நிலையில், திட்டப் பணிகள் மிக விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில், இந்தியாவின் ஆக உயரமான கட்டடம் உள்ள நகரம் என்ற பெருமை குருகிராமுக்கு கிடைக்கும். மேலும், உலகளவில் புகழ்பெற்ற பத்து உயரமான கட்டடங்களின் வரிசையிலும் இடம்பெறும்.

மும்பையில் அமைந்துள்ள 984 அடி உயரமுள்ள ‘பாலே ராயல்’ கட்டடம்தான் தற்போது இந்தியாவின் ஆக உயரமானது.

குறிப்புச் சொற்கள்