புதுடெல்லி: தற்போது நடைபெறுவது தொழில்நுட்பத் தலைமைத்துவத்துக்கான இந்திய தலைமுறை (பெருங்காலம்) என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் பகுதி மின்கடத்தி தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒட்டுமொத்த உலகுக்கும் நன்மை பயக்கும் எனத் தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘குவாண்டம்’ தொழில்நுட்பம், விண்வெளி, அணுசக்தி தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டு என்பது தொழில்நுட்பப் போட்டிக்கானது மட்டுமல்ல, எதிர்கால தொழில்நுட்பக் களத்தை வடிவமைப்பது பற்றியது என்றும் திரு மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், உலகளாவிய மாற்றத்தில் ஒரு பங்கேற்பாளராக இருப்பதைவிட, தலைமைத்துவத்துக்கான ஒரு நாடாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்தியா விரும்புகிறது என்றார்.
அகமதாபாத்தில் கெய்ன்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ரூ.3,300 கோடி மதிப்பிலான குறைக்கடத்தி ஆலையை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) திரு மோடி திறந்து வைத்தார்.
இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள தனித்துவம் வாய்ந்த இரண்டாவது ஆலை இது என்று குறிப்பிட்ட அவர், பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியா ஒரு முக்கியமான நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் இந்தியா சிறப்பாகச் செயல்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதில் உலக அளவில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான இந்தியாவின் முன்னெடுப்புகள், நடத்தப்பட்ட மாநாடுகளின் வெற்றி கவனிக்கத்தக்கது என்று குறிப்பிட்ட அவர், அதிகரித்து வரும் துறைசார்ந்த பங்கேற்பையும் தொழில்துறையின் வேகத்தையும் சுட்டக்காட்டினார்.
“எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக நிலைநிறுத்தப்பட்டு வரும் குறைக்கடத்தித் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களால், இந்தியாவின் விரிவடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுச் சூழலமைப்பு பயனடையும்.
“அரசு முக்கியமான தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை அதிகரித்து, சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது. விண்வெளி, அணுசக்தி, குவாண்டம் கணினி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

