புதுடெல்லி: இந்தியாவின் உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13), டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கியுள்ளது.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அவர், கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப்பின் விடுவிக்கப்படவுள்ளார்.
கடந்த மார்ச் மாதம், இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறச் சில வாரங்களே எஞ்சியிருந்த நிலையில், திரு கெஜ்ரிவால் அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழலில் அவருக்குப் பங்கிருப்பதாகக் கூறப்பட்டது.
ஜூலை மாதம் அவருக்குப் பிணை வழங்கப்பட்டபோதும், அதே மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பில் ஜூன் மாதம் மத்திய காவல்துறை கைது செய்ததால் திரு கெஜ்ரிவால் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
திரு கெஜ்ரிவாலும் அவரது ஆம் ஆத்மி கட்சியும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன் அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.
இவ்வேளையில், ஆம் ஆத்மி கட்சியின் இதர தலைவர்களும் தொண்டர்களும் திரு கெஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கப்பட்டிருப்பதை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும் திரு கெஜ்ரிவாலுடன் நெருங்கிய தொடர்புடையவருமான திரு மணிஷ் சிசோடியா, உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு வாய்மையின் வெற்றியைக் காட்டுவதாகக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“பொய்கள், கூட்டுச் சதிகளுக்கு எதிரான போரில் மீண்டும் உண்மை வென்றுள்ளது. 75 ஆண்டுகளுக்குமுன்பே வருங்காலத்தில் யாரும் சர்வாதிகாரியாக நடந்துகொண்டால் அவர்களுக்கு எதிரான சாதாரணர்களின் நிலையை வலுவூட்டிய அம்பேத்கரின் தொலைநோக்குச் சிந்தனையை மீண்டும் வணங்குகிறேன்,” என்று அவர் கூறினார்.
டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, “வாய்மையே வெல்லும். உண்மைக்கு இடையூறுகள் வரலாம் ஆனால் அது ஒருபோதும் தோற்காது,” என்றார்.
ஆம் ஆத்மி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா, திரு கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் உட்படப் பலரும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றனர்.