கூடுதல் வரிக்கு மத்தியிலும் குறையாத இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதி

கூடுதல் வரிக்கு மத்தியிலும் குறையாத இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதி

2 mins read
d1e892ef-8728-4cc8-ae31-e15a4b00c1be
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் பீமாவரத்தில் உள்ள இறால் பண்ணையில், குளிரூட்டப்பட்ட லாரியில் ஏற்றுவதற்காக இறால்களைத் தொழிலாளர்கள் தரம் பிரிக்கின்றனர். - படம்: புளூம்பர்க்
multi-img1 of 2
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய ஏற்றுமதிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூடுதல் வரி விதித்த நிலையிலும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு தொடர்ந்து மாறாமல் நீடிக்கிறது.

இந்திய வர்த்தக அமைச்சின் தரவுகளின்படி, ஜூலை வரையிலான கடந்த 12 மாதங்களில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி ஏறத்தாழ 20 விழுக்காடு. அதே காலகட்டத்தில் இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரை கூடுதல் வரிவிதித்தபோதிலும், அமெரிக்கச் சந்தைக்கான தேவை குறையவில்லை.

பிற நாடுகளுடனான வணிக விரிவாக்க முயற்சிகள் அதிகரித்துள்ளபோதும் அமெரிக்கா இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது.

அமெரிக்க வணிகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் குறைக்க, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஓமான், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் இந்தியா தாராள வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

மின்னணுவியல், பொறியியல் பொருள்கள் உள்ளிட்ட 500 புதிய தயாரிப்புகளையும் ஏற்றுமதிப் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது.

எனினும், உலகளவில் அமெரிக்கச் சந்தைக்கு மாற்றைக் கண்டுபிடிப்பது கடினம் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.

பன்முகமாக வணிக நடைமுறைக்கு வர இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்றார் அவர்.

உலகளவில் மாறும் வணிகச் சூழலில், ஒற்றைச் சந்தையை மட்டும் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் பொருளியல் பங்காளித்துவத்தை வலுப்படுத்தவும் அந்த வணிக ஒப்பந்தங்கள் பெரிதும் உதவும் என்று இந்திய வர்த்தகத் துறைச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தான்சானியா, வியட்னாம், தென் கொரியா, இலங்கை, கென்யா போன்ற சிறிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 42 விழுக்காடு உயர்ந்து US$21.5 பில்லியனை எட்டியுள்ளது. எனினும் இது அமெரிக்காவுடனான US$88.5 பில்லியன் வணிகத்தைவிடக் குறைவுதான்.

தாராள வணிக ஒப்பந்தங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை மாற்ற உதவும் என்றும், ஜி20 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது இந்தியாவிற்குப் பெரிதும் உதவும் என்றும் வணிக நிபுணர் பிரிதம் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாஏற்றுமதிஅமெரிக்காவணிகம்வர்த்தகம்புள்ளியியல்புள்ளிவிவரம்