நம்பிக்கை மோசடி செய்ததாக இந்திய ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
528a6514-2e3d-43fd-9fcc-020bc30c9105
இந்தியாவைச் சேர்ந்த 29 வயது சுந்தர் அரவிந்த், சாங்கி விமான நிலைய முனையம் இரண்டில் பணியாற்றிய போது குற்றச் செயலில் ஈடுபட்டார்.  - படம்: ‌ஷின்மின்

சாங்கி விமான நிலையத்தில் துணைக் காவல்படை அதிகாரியாகப் பணிபுரிந்தபோது பயணி ஒருவர் தவறவிட்ட காதொலிக் கருவியைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர் மீது நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த 29 வயது சுந்தர் அரவிந்த், சாங்கி விமான நிலைய முனையம் இரண்டில் பணியாற்றிய போது குற்றச் செயலில் ஈடுபட்டார்.

விமானத்தில் பயணம் செய்த ஒருவர், ‘ஏர்பாட்ஸ்’ காதொலிக் கருவியை விமானத்தில் மறந்துவிட்டுச் சென்றுவிட்டார். விமானச் சிப்பந்திகளில் ஒருவர், அதை எடுத்து துணைக் காவல்படை அதிகாரியான சுந்தரிடம் ஒப்படைத்தார்.

சுந்தர் காணாமல்போன பொருள்களை சேகரிக்கும் பிரிவில் தன்னிடமுள்ள வேறொரு காதொலிக் கருவியைக் கொடுத்துவிட்டு ஏர்பாட்சை தன்னிடம் வைத்துக் கொண்டார்.

காதொலிக் கருவியைப் பெற்றுக் கொள்வதற்காக அங்கு வந்த பயணி, அது தன்னுடையது அல்ல என்று பிப்ரவரி 28ஆம் தேதி புகார் செய்தார். அதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியது. சுந்தரின் குற்றச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாக சுந்தர் தெரிவித்தார். ஏர்பாட்ஸ் கருவி பயணியிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணை ஏப்ரல் 17ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை மோசடி குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்