மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ நாட்டுக்கு அர்ப்பணிப்பு

2 mins read
d14a6d98-3a97-407e-9b1a-b80efb3c85b1
 ‘சமுத்திர பிரதாப்’ கப்பல். - படம்: தி இந்து திசை

பானாஜி: இந்தியாவிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்பட்ட முதல் மாசுக்கட்டுப்பாட்டு கப்பலான ‘சமுத்திர பிரதாப்’ நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கப்பலை இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது பேசிய அவர், இந்திய கடலோரக் காவல்படை கப்பல் தொகுப்பில் உள்ள ஆகப்பெரிய கப்பல் ‘சமுத்திர பிரதாப்’தான் என்றார்.

உள்நாட்டில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், ‘தற்சார்பு இந்தியா’ என்ற திட்டத்தின்கீழ் நாடு அடைந்துள்ள வலுவான முன்னேற்றம் என்றார் அவர்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் உண்மையான அர்த்தம் இதுபோன்ற திட்டங்கள் மூலம் தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘சமுத்திர பிரதாப்’ மாசுக் கட்டுப்பாட்டு கப்பல் 114.5 மீட்டர் நீளம் கொண்டது. இதன் எடை 4,200 டன்களாகும். 22 நாட்டிகல் மைல் வேகத்தில் 6,000 நாட்டிகல் மைல் தூரத்துக்கு பயணம் செய்யத்தக்க திறனுடையது.

கடல்சார் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்துதல், தேடல்-மீட்பு நடவடிக்கைகள், இந்தியாவின் சிறப்பு பொருளியல் மண்டலங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை ‘சமுத்திர பிரதாப்’ மேற்கொள்ளும்.

கடற்பரப்பில் திடீரென ஏற்படும் எண்ணெய்க் கசிவு, இதர வேதியியல் மாசுக்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக அகற்றும் நவீன தொழில்நுட்பங்களும் இந்தக் கப்பலில் உள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் இக்கப்பல் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

“இந்​தி​யா​வில் கட்​டப்​பட்ட ஆகப்​பெரிய மற்​றும் மிக​வும் மேம்​பட்ட மாசுக் கட்​டுப்​பாட்​டுக் கப்​பலான சமுத்​திர பிர​தாப், நாட்​டின் கப்பல் கட்​டும் சிறப்​புக்கு​ சிறந்த சான்று. தூய்​மை​யான, பாது​காப்​பான தற்​சார்பு கொண்ட கடல்​சார் எதிர்​காலத்​துக்கும் நீண்​ட​கால தொலைநோக்​குப் பார்​வைக்​கும் நல்ல சான்​றாகத் திகழ்கிறது,” என்றார் திரு ராஜ்​நாத் சிங்.

இந்தக் கப்பல் துணை ஆய்வாளர் ஜெனரல் அசோக் குமார் பாமா தலைமையில் இயங்கும். இது கொச்சியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

14 அதிகாரிகள் மற்றும் 115 பணியாளர்கள் அடங்கிய குழு இக்கப்பலில் பணியில் இருக்கும்.

இந்தக் குழுவில் முதன்முதலாக ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றும் இரண்டு பெண் அதிகாரிகளின் நியமனமும் அடங்கும் என்று இந்தியக் கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்