டெல்லி பாதுகாப்புக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு

2 mins read
d586deda-6b54-4bc6-b308-cd31405a15a5
சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பு டெல்லியைச் சுற்றி 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக, பல அடுக்கு பாதுகாப்பை வழங்கும். - என்டிடிவி

புதுடெல்லி: புதுடெல்லியின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யும் வகையில், ‘சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம்’ அமைப்பை நிறுவ இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.5,181 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

‘சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம்’ என்பது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள பல்வேறு பயங்கரவாத முகாம்களை இந்தியப் படைகள் தகர்த்தன. பாகிஸ்தானைச் சேர்ந்த வான்வழி ஊடுருவல் முயற்சிகளை இந்தியப் படைகள் தவிடுபொடியாக்கின.

இதையடுத்து ‘சுதர்சன சக்கரம்’ என்ற பெயரில் உள்நாட்டிலேயே வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், இந்த நவீன வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு எதிர்வரும் 2035க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று இலக்கு நிர்ணயித்தார்.

நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகள், நகரங்கள், ராணுவ நிலையங்களுக்கு எளிதான பாதுகாப்புக் கவசத்தை நிறுவுவதே இதன் நோக்கம்.

இந்நிலையில், ‘சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு’ அமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தலைநகர் புதுடெல்லி, அதன் சுற்றுவட்டாரங்களில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வான் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்படும் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு அமைப்பு டெல்லியைச் சுற்றி 30 கிலோ மீட்டர் பரப்பளவில் நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக, பல அடுக்கு பாதுகாப்பை வழங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்புள்ள பகுதிகளில், நிகழ்நேர வான் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையானது, இந்தியாவின் தற்காப்புக் கொள்கையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்