அன்னையர் தினப் பரிசு: ஒரே விமானத்தில் தாய்க்கும் மகளுக்கும் பணி!

அன்னையர் தினப் பரிசு: ஒரே விமானத்தில் தாய்க்கும் மகளுக்கும் பணி!

1 mins read
7d2cc9a1-9b65-4b99-b812-219d1a47b95c
நபிரா சஷ்மியும் அவரின் தாயாருடன் ஒரே விமானத்தில் பணிப்பெண்களாக இருந்தது இதுவே முதன்முறை. காணொளிப்படம் -

வழக்கம்போல, இவ்வாண்டும் அன்னையர் தினம் பலருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்கும்.

அவ்வகையில், சமூக ஊடகங்களில் பரவலாகிவரும் அழகானதொரு காணொளி தாய்க்கும் மகளுக்குமான அன்புப் பிணைப்பை உலகறியச் செய்துள்ளது.

அன்னையர் தினப் பரிசாக, தாயும் மகளும் ஒரே விமானத்தில் சிப்பந்திகளாகப் பணியாற்ற வாய்ப்பு வழங்கியது இண்டிகோ நிறுவனம்.

காணொளியில், பயணிகளுக்கான அறிவிப்பின்போது நபிரா சஷ்மி என்ற பெண் சிப்பந்தி முதலில் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்; பின்னர் தம் தாயாரை அறிமுகப்படுத்துகிறார். ஒரே விமானத்தில் தன் சக பணியாளராக, விமானப் பணிப்பெண்ணுக்கான சீருடையில் தம் தாயாரைத் தான் காண்பது இதுவே முதன்முறை என்று அவர் கூறுகிறார்.

அந்த அறிவிப்பைக் கேட்டு நெகிழ்ச்சியில் கண்கலங்கிய நபிராவின் தாயார், பின் அவரது கன்னங்களில் முத்தமிட்டார். இந்த அழகான காட்சியைக் கண்ட பயணிகள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, கைதட்டி, அவர்களை உற்சாகப்படுத்தினர்.

இண்டிகோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இக்காணொளியை வெளியிட்டுள்ளது.

"தரையிலும் வானத்திலும் எனது முதுகெலும்பாகத் திகழ்பவருக்கு அன்னையர் தின வாழ்த்துகள்," என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.