விமானச் சேவைகளைக் குறைக்கும்படி இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவு

1 mins read
45635a4f-0d91-44b4-8b80-6a837b175261
புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 8) விமானப் பயணிகளின் உடைமைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இண்டிகோ ஊழியர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பெருஞ்சிக்கலை எதிர்கொண்டுவரும் இண்டிகோ நிறுவனம் தனது விமானச் சேவைகளில் ஐந்து விழுக்காட்டைக் குறைக்குமாறு இந்தியப் பொது விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இதன் தொடர்பில் டிஜிசிஏ செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) பிறப்பித்துள்ள உத்தரவில், எல்லாப் பிரிவுகளிலும் அந்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, அதிகத் தேவையுள்ள, அதிகமாக இயக்கப்படும் வழித்தடங்களில் சேவைக் குறைப்பைச் செயல்படுத்த வேண்டும்.

அதன்படி, திருத்தப்பட்ட சேவை அட்டவணையை புதன்கிழமை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கும்படியும் இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 1ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகளை இண்டிகோ ரத்துசெய்து வருவதால் விமான நிலையங்களில் பெருங்குழப்பம் நிலவி வருகிறது.

இந்நிலையில், இண்டிகோ சேவை வழங்கும் வழித்தடங்கள் குறைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் திங்கட்கிழமை அறிவித்திருந்தார். அதனடிப்படையில், டிஜிசிஏயின் உத்தரவு வெளியாகியிருக்கிறது.

குளிர்கால அட்டவணையின்படி, இண்டிகோ நாளொன்றுக்கு 2,200 விமானங்களை இயக்கி வருகிறது.

இதனிடையே, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கான 180 விமானங்களை செவ்வாய்க்கிழமை இண்டிகோ ரத்துசெய்ததாக பிடிஐ செய்தி குறிப்பிட்டது. முன்னதாக, திங்கட்கிழமை ஆறு பெருநகரங்களுக்கான 560 விமானங்களை அது ரத்துசெய்தது.

குருகிராமைத் தளமாகக் கொண்ட இண்டிகோ நிறுவனம், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 65 விழுக்காட்டைத் தன்வசம் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்