கூடுதல் எரிபொருள் கட்டணம் வசூலிக்க இண்டிகோ நிறுவனம் முடிவு

கூடுதல் எரிபொருள் கட்டணம் வசூலிக்க இண்டிகோ நிறுவனம் முடிவு

கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

05 Oct 2026 - 6:49 pm

2 mins read

புதுடெல்லி: மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையும் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவும், இந்தியாவில் உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணக் கட்டணங்கள் மீண்டும் உயர உள்ளன.

நாட்டின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ‘இண்டிகோ’, அக்டோபர் 6 முதல் தனது அனைத்து விமானங்களுக்கும் புதிய ‘கூடுதல் எரிபொருள் கட்டணம்’ விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அண்மைக்காலமாக விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் அதன் விலை 14 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதால், நிறுவனத்தின் செயல்பாட்டுச் செலவுகள் பேரளவில் கூடியுள்ளன.

விமானச் சேவையின் மொத்தச் செலவில் எரிபொருளுக்கான பங்கு மட்டுமே கிட்டத்தட்ட 40 விழுக்காடாக இருப்பதால், இந்தக் கட்டண உயர்வைத் தவிர்க்க முடியாது என நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

புதிய அறிவிப்பின்படி, பயணிகள் பயணிக்கும் தொலைவிற்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்:

உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணம் தொலைவு அடிப்படையில் ரூ.425 (500 கிலோமீட்டர் வரை) முதல் அதிகபட்சமாக ரூ.1,300 (2,000 கிலோமீட்டருக்கு மேல்) உயர்த்தப்படுகிறது.

அதேபோல் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய மண்டலத்திற்கு ரூ.5,500ம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.6,000ம், ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்க் மண்டல நாடுகளுக்குத் தொலைவைப் பொறுத்து ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படவுள்ளது.

அக்டோபர் 6 நள்ளிரவு 00:01 மணி முதல் செய்யப்படும் புதிய முன்பதிவுகளுக்கு இக்கட்டணங்கள் பொருந்தும். ஏற்கனவே பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இது பொருந்தாது.

“எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும் அதேவேளையில் பயணிகளுக்கு அதிகச் சுமை இல்லாத வகையில் அளவோடு கட்டணத்தைச் சீரமைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திடீரென உயர்த்தப்பட்டுள்ள இந்தக் கூடுதல் கட்டணத்தால் பண்டிகைக் காலங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
பயண சேவைகட்டணம்எரிபொருள்விலையேற்றம்