புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான விமான தாமதங்கள், சேவை ரத்துகளால் பயணிகளுக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக, விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) 22.2 கோடி ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு நிறுவனத்தின் மீது இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இண்டிகோ நிறுவனம் தனது குளிர்கால அட்டவணையைச் செயல்படுத்தியது. அப்போது புதிய பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்டப் பணியாளர்களுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.
ஊழியர்களின் பணி நேரத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதும் போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாததுமே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் இந்தத் தவறான திட்டமிடலால் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
நிர்வாகக் குறைபாடுகளால் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் அவதிக்கும் உள்ளாகினர்.
இக்குளறுபடிகளுக்கு வழிவகுத்த சூழலை விரிவாக ஆராய்ந்து மதிப்பிட, இணைத் தலைமை இயக்குநர் சஞ்சய் கே. பிராமனே தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை இயக்குநரகம் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை டிசம்பர் 27ஆம் தேதி சமர்ப்பித்தது.
விசாரணைக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, முறையான திட்டமிடல் இல்லாததற்காக 1.80 கோடி ரூபாய், தொடர்ந்து 68 நாள்களாக விதிமுறைகளை மீறியதற்காக, நாளொன்றுக்கு 30 லட்சம் ரூபாய் வீதம் 20.40 கோடி ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 22.20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம் தவிர்த்து, இயக்குநரகத்தின் உத்தரவுகளுக்கு இணங்கிச் செயல்படுவதையும் நீண்ட கால அடிப்படையில் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்வதையும் உறுதி செய்யும் வகையில், 50 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் அளிக்கவும் இண்டிகோவிற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், செயல்பாட்டு அதிகாரி ஆகியோருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த துணைத் தலைவர் அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

