சூரத்: தேனீக்கள் தொல்லையால் இண்டிகோ விமானத்தின் புறப்பாடு சுமார் ஒருமணி நேரம் தாமதமானது.
குஜராத் மாநிலம், சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் விமானம், செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மாலை 4.30 மணிக்குப் புறப்படத் தயாரானது.
அப்போது பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியின் கதவோரப் பகுதியை ஏராளமான தேனீக்கள் சூழ்ந்திருப்பது தெரியவந்தது.
மேலும், அது எந்நேரத்திலும் ஊழியர்களைத் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் எழுந்தது. இதனால் புகைமூட்டம் மூலம் அவற்றைக் கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதற்குப் பலன் கிடைக்காததை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி தேனீக்களை விரட்டினர். இதையடுத்து அந்த விமானம் ஒருமணி நேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, பாட்னாவில் இருந்து 169 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் மீது நடுவானில் பறவை மோதியது. அதனால், விமானம் மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) 51 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டு, அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.