புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் சனிக்கிழமை (மார்ச் 28) காலை, இயந்திரக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் பயணிகள் 161 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள் முழு அவசர நிலையை அறிவித்தனர்.
விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்தது.
சனிக்கிழமை காலை 10:54 மணியளவில் அவசரத் தரையிறக்கம் குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அது மேலும் குறிப்பிட்டது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து டெல்லி நோக்கிச் சென்ற அந்த போயிங்-737 வகை விமானத்தைத் துருக்கியின் ‘கொரெண்டன் (Corendon) ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திடமிருந்து இண்டிகோ நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
குறுகிய காலச் செயல்பாட்டிற்காக அத்தகைய ஐந்து விமானங்களை இண்டிகோ நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், 6E 579 விமானம் தரையிறங்குவதற்குச் சற்று முன்னதாகவே தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தது.
“முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வழக்கமான பாதுகாப்பு விதிமுறைகளின்படியும் விமானிகள் முன்னுரிமை அடிப்படையில் தரையிறங்க அனுமதி கோரினர். இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது,” என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அந்த விமானம் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பயணிகளின் பாதுகாப்பிற்கு இண்டிகோ நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது என்றார்.

