புதுடெல்லி: இண்டிகோ விமானத்தின் விமானச் சேவையில் கடந்த ஒரு மாதமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு இடையூறுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
பல்வேறு சிக்கல்கள் காரணமாக, கடந்த நவம்பர் மாதத்தில் இண்டிகோ நிறுவனத்தின் 1,200 விமானச் சேவைகள் ரத்தாயின. கடந்த 4ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து விமானப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
விமானிகள், விமான ஊழியர்களுக்கான புதிய ஓய்வு விதிகளின் அமலாக்கமே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டதையடுத்து, புதிய விதிகளை நிறுத்தி வைப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெள்ளிக்கிழமை நவம்பர் 5ஆம் தேதி அறிவித்தது.
இதன்மூலம் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் இண்டிகோ நிறுவனத்தின் விமானச் சேவை தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெறும் என அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்திருந்தார்.
நடந்துவிட்ட பெரும் தவற்றுக்காக மன்னிப்பு கோருகிறோம் என இண்டிகோ நிறுவனம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் இதேபோன்ற இடையூறுகளை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

