புதுடெல்லி: இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகரத்தின் உத்தரவின்பேரில் இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் அது வழங்கி வரும் சேவைகளில் 10 விழுக்காட்டுச் சேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளது. அதையடுத்து அந்த நிறுவனம் 94 வழித்தடங்களில் நாள்தோறும் 130 விமானச் சேவைகளைக் குறைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, டிசம்பர் மாதத் தொடக்கத்தில், பெரும் திட்டமிடல் நெருக்கடியில் சிக்கியது.
அதன் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான பயணிகள் தவிப்புக்குள்ளானதோடு, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதில் பெங்களூரில்தான் அதிக உள்நாட்டு விமானச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விமானச் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமானச் சேவை குறைக்கப்படவில்லை. மும்பையில் வருகை-புறப்பாடு என இரண்டு விமானங்கள் மட்டுமே சேவையில் இருக்கும். வெவ்வேறு நாட்களில் திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை சற்று மாறுபடக்கூடும் என்பதால், மற்ற நாட்களுக்கான அட்டவணை மாற்றங்களில் சிறிய வேறுபாடுகள் இருக்கலாம் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று புதிய விமானச் சேவை நிறுவனங்கள்
இண்டிகோ ஏர்லைன்ஸ் நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளைத் தொடங்குவதற்குத் தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் விமானச் சேவையைத் தொடங்க விரும்பும் ‘ஷாங்க் ஏர்’ (Shankh Air), ‘அல் ஹிந்த்’ (Al Hind) மற்றும் ‘ஃப்ளை எக்ஸ்பிரஸ்’ (Fly Express) ஆகிய நிறுவனங்களின் குழுக்களை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்ததாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இண்டிகோ நெருக்கடி பல நாட்கள் நீடித்தபோது, அரசின் விமானப் போக்குவரத்து கொள்கை கேள்விக்குறியானது.
தொடர்புடைய செய்திகள்
உள்நாட்டு விமானச் சந்தையில் இண்டிகோ நிறுவனம் ஆதிக்கம் செலுத்தியதே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

