புதுடெல்லி: இந்திய விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை வியாழக்கிழமை (செப்டம்பர் 17) முதல் உயர்த்தியுள்ளது.
கூடுதல் பயணப்பொதிக் கட்டணம், கைக்குழந்தைகளுக்கான பயணக் கட்டணம், தனியாகப் பயணம் செய்யும் குழந்தைகளுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றை இண்டிகோ நிறுவனம் வியாழக்கிழமை முதல் உயர்த்தியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக எடைக்கு ஒரு கிலோவுக்கு ரூ.700 ஆக இருந்த கட்டணம் ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பிறந்து மூன்று நாள்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகள் பயணம் செய்வதற்கான கட்டணம் 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரூ.2,000 ஆக இருந்த குழந்தைகளுக்கான பயணக் கட்டணம் தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி குழந்தைகளுக்கும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் தனி இருக்கை கிடையாது.
உள்நாட்டு விமானங்களில் பெற்றோர் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யும் 5 முதல் 12 வயது வரையிலான சிறார்க்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ரூ. 5,000லிருந்து ரூ.5,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே சேவைக்கு வெளிநாட்டு விமானங்களில் ரூ.12,999 ஆக வசூலிக்கப்படுகிறது.
அத்துடன் முன்னுரிமைப் பதிவு (Priority Check-in), பயணச் சான்றிதழ்கள் போன்ற கூடுதல் சேவைகளுக்கான கட்டணங்களையும் இண்டிகோ உயர்த்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, நாளொன்றுக்கு 2,500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு விமானச் சேவைகளில் 60 விழுக்காட்டுக்குமேல் இண்டிகோ நிறுவனம் பங்களித்து வருகிறது.
தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையால் அந்த விமான நிறுவனம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. மேலும், வான்வெளி மூடல்கள் காரணமாகச் சில அனைத்துலக விமானச் சேவைப் பாதைகள் மாற்றப்பட்டு, நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், பயண நேரமும் இயக்கச் செலவும் அதிகரித்துள்ளன.
நிறுவனத்தின் விமான எரிபொருள் செலவு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு எனும் அடிப்படையில் 86 விழுக்காடாக அதிக அளவில் உயர்ந்து ரூ.10,830 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்தச் செலவினங்களும் 34.4 விழுக்காடு உயர்ந்து ரூ.25,853 கோடியைத் தொட்டுள்ளன.
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட், 2026 ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.382 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.2,161 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.
