புதுடெல்லி: மும்பை, புதுடெல்லி உட்பட பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு இண்டிகோ விமானச் சேவை செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பல்வேறு விமான நிறுவனங்கள் ஈரான் வான்பரப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன.
இந்நிலையில், ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அசர்பைஜான் ஆகிய நான்கு நாடுகளுக்கு ஜனவரி 28ம் தேதி வரை விமானச் சேவையை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை, ஈரான் வான்பரப்பைப் பயன்படுத்தாமல் தவிர்த்தல் உள்ளிட்ட காரணங்களால் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் சில நாடுகளுக்கான விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

