இந்தியா, இந்தோனீசியா பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்து

1 mins read
9b68a49e-7fbe-438c-816e-5f5b8c117756
புதுடெல்லி அதிபர் மாளிகையில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. - படம்: இபிஏ

மும்பை: இந்தியாவும் இந்தோனீசியாவும் பல்வேறு உடன்பாடுகளில் கையெழுத்திட்டு உள்ளன.

கலாசாரம், சுகாதாரம், கடல்துறை, பாதுகாப்பு மற்றும் மின்னிலக்கத் துறைகள் தொடர்பான உடன்பாடுகள் அவை.

இந்தியக் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அந்த உடன்பாடுகளை இருநாடுகளும் செய்துகொண்டன.

கையெழுத்திடும் நிகழ்வை இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பார்வையிட்டனர்.

கையெழுத்து நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் பிரபோவோ, இந்தியாவுடனான பொருளியல் பங்காளித்துவத்தை தமது அரசாங்கம் வேகப்படுத்தும் என்றும் நீண்டகால ஒத்துழைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

“பொதுமக்களின் நலன் தொடர்பான முக்கிய துறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியாவுடனான எங்களது ஒத்துழைப்பை விரைவுபடுத்த விரும்புகிறோம்,” என்றார் அவர்.

பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறுவதற்கான நடைமுறை வாயிலாக இந்தோனீசியாவுக்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு திரு பிரபோவோ நன்றி தெரிவித்தார்.

வளர்ந்து வரும் சந்தைப் பொருளியல் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், உலகின் நிலைத்தன்மைக்கும் வட்டார ஒத்துழைப்புக்கும் பலனளிக்கும் என்றார் அவர்.

முன்னதாகப் பேசிய பிரதமர் மோடி, தற்காப்பு சாதன உற்பத்தி, விநியோகத் தொடர் மேம்பாடு ஆகிய அம்சங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றார்.

“இணையப் பாதுகாப்பு, கடல்துறைப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாதச் சிந்தனை ஒழிப்பு போன்ற விவகாரங்களில் ஒத்துழைக்கவும் முடிவு செய்துள்ளோம்,” என்றார் திரு மோடி.

குறிப்புச் சொற்கள்