இந்துார்: இந்தியாவில் யாசகர்கள் இல்லாத முதல் நகரமாக, மத்தியப் பிரதேசத்தின் இந்துார் தேர்வாகியுள்ளது.
தூய்மை நகரம் என்ற பெருமையைக் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தூர் தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், அந்நகருக்கு யாசகர்கள் அற்ற நகரம் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.
இந்துார் நகரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதற்கான பிரசாரம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியதாகவும் அம்மாநில உயரதிகாரி ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்தூருடன் சேர்த்து, நாட்டின் 10 நகரங்களை யாசகர் இல்லாத இடமாக மாற்றுவதற்கான பிரசாரம் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“இந்துாரில் 500 பிள்ளைகள் உட்பட 5,000 யாசகர்கள் இருந்தனர். அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தந்ததோடு, வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களைப் பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மாற்றினோம்,” என்றார் அவர்.
யாசகர்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்ததாகவும் அதிலிருந்து படிப்படியாக யாசகர்களே இல்லாத நகரமாக இந்தூர் மாறி விட்டதாகவும் அவர் பெருமிதத்தோடு கூறினார்.

