புதுடெல்லி: பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காஷ்மீர் பகுதியில் கட்டப்பட்டுவரும் நீர்மின் திட்டப் பணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, 1960ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்துவரும் இந்த நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தம் செய்தது. மேலும், அப்பகுதியில் உள்ள இரு நீர்மின் திட்டங்களின் நீர்த்தேக்கக் கொள்ளளவை உயர்த்தும் பணிகளையும் தொடங்கியது. இதை எதிர்த்து பாகிஸ்தான் அனைத்துலக நீதிமன்றத்தை அணுகியது.
வழக்கை விசாரித்த நடுவர் நீதிமன்றம், இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்த எந்தவித நியாயமான காரணமும் இல்லை என்றும் ஒப்பந்த விதிகளை இந்தியா முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
எனினும், இந்தத் தீர்ப்பை இந்திய வெளியுறவு அமைச்சு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
“இந்தியாவின் இறையாண்மை சார்ந்த முடிவுகளில் கருத்து தெரிவிக்க இந்த நடுவர் நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை. இதன் அறிவிப்புகள் எதுவுமே இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு தொடர்பாக உலக வங்கியால் நியமிக்கப்படும் நடுநிலை நிபுணர் ஒருவர் 2027 ஜூலைக்குள் இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


