புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்த நிலையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவைப் பாகிஸ்தான் கைவிட வேண்டுமென இந்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
பாகிஸ்தான் தன்னை மாற்றிக்கொள்ளாத வரை இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது எனப் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
‘ஆப்பரேஷன்’ சிந்தூர், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதென இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலவும் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவை நம்பகமான வகையில் கைவிட வேண்டும். பயன்பாட்டில் இல்லாத சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்கீழ் எந்தவொரு கடமையையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இனி இல்லை,” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 2025 ஏப்ரல் மாதம் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்துப் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.
இவ்வேளையில், வெனிசுவேலாவில் இருந்து மீட்கப்பட்ட இந்தியக் கடலோடி ஒருவரது உடலில் இருந்து முக்கியமான உறுப்புகள் அகற்றப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அந்நாட்டு அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஜெய்ஸ்வால் அதுகுறித்து விரைவாக விசாரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

