பச்சிளங்குழந்தையின் கட்டைவிரல் துண்டிப்பு; தாதியர் மீது நடவடிக்கை

2 mins read
5120aaee-38ed-43f0-9e29-26d40aa1d03e
குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் சம்பவம் நடைபெற்றதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். - கோப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் ஒன்றரை மாதக் குழந்தையின் கட்டைவிரல் தவறுதலாகத் துண்டிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் அந்தக் குழந்தை சளிக் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தது. குழந்தையின் மணிக்கட்டில் இருந்த கேனுலாவை (ஊசி மூலம் மருத்துகளைச் செலுத்துவதற்கான குழாய்) தாதியர் அகற்றும்போது கட்டை விரலைத் துண்டித்து விட்டார்.

இந்தியாவின் ஆகப்பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள அந்த அரசாங்க மருத்துவமனையின் நிர்வாகம், தாதியர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

புதன்கிழமை குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.

எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் எம்ஒய் மருத்துவமனையின் மேற்பார்வையாளருமான டாக்டர் அரவிந்த காங்கோரியா, சுவாசக் காற்று ஆதரவுடன் குழந்தை குணமடைந்து வந்த சமயத்தில் தாதியர் கத்திரிக்கோலலைப் பயன்படுத்தி மணிக்கட்டில் ஒட்டப்பட்டிருந்த கேனுலாவை அகற்றினார். அப்போது தவறுதலாக குழந்தையின் கட்டைவிரலை அவர் துண்டித்துவிட்டார் என்றார்.

மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி அங்கு வெற்றிகரமாக குழந்தையின் கட்டைவிரல் ஒட்ட வைக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கவனக்குறைவாக இருந்ததற்காக சம்பந்தப்பட்ட தாதியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தை இருந்த வார்டு, மூன்று மூத்த தாதியர்களின் மேற்பார்வையில் இருந்தது. இதனால் மூவரின் ஒரு மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த 24 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று டாக்டர் காங்கோரியா மேலும் தெரிவித்தார்.

டாக்டர் அஷோக் யாதவ் தலைமையிலான விசாரணைக் குழுவில் குழந்தைநல மருத்துவர் டாக்டர் நிர்பாய மேத்தா, டாக்டர் ரோஹித் பேடெரியா, தாதியர் மேற்பார்வையாளர் தயாவதி தயால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தாதியரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 3,000 படுக்கைகளைக் கொண்ட எம்ஒய் மருத்துவமனை மாநிலத்தின் பொது சுகாதாரத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு குழந்தைகளுக்கான பிரிவில் எலி கடித்த சம்பவத்தில் புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்தததால் அந்த மருத்துவமனை தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

ஆனால் முன்கூட்டியே பிறந்ததால் ஏற்பட்ட மருத்துவ சிக்கல் காரணமாக இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக பின்னர் வெளியிடப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்