ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் வட்டாரத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக் கோட்டில் பயங்கரவாதிகள் இருவரைத் தாங்கள் கொன்றுவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அச்சம்பவம் ராஜூரி மாவட்டத்தில் உள்ள நொவ்ஷெரா பகுதியில் நிகழ்ந்தது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் திட்டத்தைத் தாங்கள் முறியடித்ததாக இந்திய ராணுவம் குறிப்பிட்டது.
உளவுத் துறை அமைப்புகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஆகியவை அளித்த தகவல்களைக் கொண்டு அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தது.
“பயங்கரவாதிகள் இருவர் முடக்கப்பட்டுவிட்டனர். இரண்டு ஏகே-47 துப்பாக்கிகள், ஒரு கைத்துப்பாக்கி உட்பட போரில் பயன்படுத்தப்படுபவை போன்றிருக்கும் ஆயுதங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்று இந்திய ராணுவம் கூறியது. தேடல் பணிகள் தொடர்வதாகவும் ராணுவம் சொன்னது.
ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடைபெற ஒன்பது நாள்களே எஞ்சியுள்ள வேளையில் ஊடுருவல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவ்வட்டாரத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிராசரக் கூட்டங்களில் உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் இருவரும் கடந்த வார இறுதியில் அங்கு சென்றனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும். செப்டம்பர் 18, 25ஆம் தேதிகளிலும் அக்டோபர் ஒன்றாம் தேதியிலும் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் எட்டாம் தேதி அறிவிக்கப்படும்.
கடந்த ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் 14 பாதுகாப்பு அதிகாரிகளும் பொதுமக்களில் 10 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது. நொவ்ஷெரா சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை எட்டுக்கு அதிகரித்துள்ளது.

