இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: பாகிஸ்தானை கண்டித்த இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவல்: பாகிஸ்தானை கண்டித்த இந்தியா

படம்: ராய்ட்டர்ஸ்

04 Oct 2026 - 3:50 pm

2 mins read

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத ஊடுருவல்கள், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் துணைபோவதைக் கண்டித்து, அந்நாட்டுத் தூதரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் அனைத்துலக எல்லையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் எச்சரித்தும், அவர்கள் தொடர்ச்சியாக எல்லை வேலியை நோக்கி முன்னேறியதால், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஆயுதமேந்திய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய நடவடிக்கைகளையே இச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

இத்தகைய ஊடுருவல்கள், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் குறித்து பாகிஸ்தான் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்நாட்டு எல்லை பாதுகாப்புப் படையினர் உடந்தையாக இருப்பதைத் தடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அனைத்துலக எல்லையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இருதரப்பு ஒப்பந்தங்களை முறையாகப் பின்பற்றவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பாகிஸ்தான் ராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்