ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
வியாழக்கிழமை (மார்ச் 5) ஜம்மு காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதாகவும் இதையடுத்து அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் இந்திய பாதுகாப்புப்படை தெரிவித்தது.
அதிகாலை 4.15 மணி வரை பயங்கரவாதிகள் சிலர் துா்கண்டி எல்லைப்பகுதியில் நுழைய முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக விழித்துக்கொண்ட இந்திய ராணுவத்தினர், ஊடுருவல்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருந்ததால் இந்த ஊடுறுவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் வெள்ளை வீரா்கள் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரைத் தலைமை இடமாகக் கொண்டு இந்தப் பிரிவு எல்லையில் கண்காணிப்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
உளவு அமைப்புகளின் தகவல்கள், தொடர் கண்காணிப்பு மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பிம்பா் காலிப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாகவும் வெள்ளை வீரா்கள் படை மேற்கொண்ட நடவடிக்கையால் பயங்கரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டதாகவும் எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பயங்கரவாதிகள் யாரேனும் கொல்லப்பட்டனரா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
அண்மைய சில மாதங்களாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் மீண்டும் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து, இந்திய ராணுவம் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த பிப்ரவரி 19, 20 தேதிகளில், ரஜெளரியின் சுந்தா்பானி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியைப் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர்.
அப்போது அவர்கள் விட்டுச்சென்ற ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

