இந்து கோவில்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல்: இருவர் கைது

இந்து கோவில்கள் குறித்து பாகிஸ்தானுக்கு தகவல்: இருவர் கைது

1 mins read
81374bce-ceb5-433c-bad2-ce726b82f01a
கோவில்களைத் தாக்க சதித்திட்டம் தீட்டியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. - சித்திரிப்புப்படம்: காலைக்கதிர்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், டெல்லியில் உள்ள கோவில்கள் தொடர்பான முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புள்ள கும்பலுடன் சமூக ஊடகங்கள் வழி பகிர்ந்த இரு ஆடவர்களை காவல்துறை கைது செய்தது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசீம் ரானா, ஆசாத் ராஜ்புத் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ள சாஜாத் என்பவருடன் கடந்த சில மாதங்களாக சமூக ஊடகங்கள் வழி தொடர்பில் இருந்துள்ளனர்.

அப்போது வாட்ஸ்அப் மூலம் மேற்கு டெல்லி மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் உள்ள கோவில்கள், முக்கியமான இடங்கள் குறித்த புகைப்படங்கள், காணொளிகளை அவர்கள் இருவரும் சாஜாத்துடன் பகிர்ந்ததாகத் தெரிகிறது.

இதேபோல், நொய்டாவில் உள்ள பிஸ்ராக் கோவில் குறித்த தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.

இதையடுத்து கைதான இருவரிடமும் உத்தரப் பிரதேச காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவரும் கோவில்களைத் தாக்க சதித்திட்டம் தீட்டியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

கடந்த காலங்களைப் போல் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்த ஏதுவாக இரு சந்தேக நபர்களும் தகவல்களைத் திரட்டி பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் பகிர்ந்தனரா என மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதையடுத்து, டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோவில்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்