புதுடெல்லி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஏற்பட்ட தேக்கம் அகன்று வருவதாக சனிக்கிழமை (நவம்பர் 8) காலை வெளியான செய்திகள் தெரிவித்தன.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அத்தியாவசிய அம்சமான தானியங்கித் தகவல் பரிமாற்ற முறையில் ஏற்பட்ட கோளாறு படிப்படியாகத் தணிந்து வருவதாகவும் விமானச் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பி வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமும் 1,500 விமானங்களைக் கையாளும் டெல்லி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) பெருங்குழப்பம் காணப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 800க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளில் நீண்டநேரத் தாமதம் ஏற்பட்டது. குறைந்தபட்சம் 20 விமானங்கள், பயணச் சேவையை ரத்து செய்தன.
சிரமங்களைக் குறைக்க, சம்பந்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருவதாக விமான நிலைய அதிகாரிகள் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கூறினர்.
விமானப் பயணிகள் தங்களது விமானத்தின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

