தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒடிசாவில் தமிழக ஐஏஎஸ் அதிகாரிமீது மைவீச்சு

2 mins read
0e5f3ef3-1f41-435f-85e8-2ea9af53a915
தன்மீது மைவீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல் மக்களின் குறைகளைக் கேட்டறிந்த திரு கார்த்திகேய பாண்டியன். - படங்கள்: இந்திய ஊடகம்

பூரி: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற ஐஏஎஸ் அதிகாரிமீது மை வீசப்பட்ட சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்தது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக இருப்பவர் கார்த்திகேய பாண்டியன். முதல்வரின் வலக்கரமாகத் திகழ்வதால் ஒடிசாவின் நிழல் முதல்வர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாட்டின் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மாநில வளர்ச்சிப் பணிகளையொட்டி, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளையும் திரு பாண்டியன் ஆய்வுசெய்தும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியும் வருகிறார்.

இந்நிலையில், பூரி மாவட்டம், சத்யபாடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது திரு பாண்டியன்மீதும் மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மாமீதும் மை வீசப்பட்டது.

ஆயினும், அதனைப் பொருட்படுத்தாமல் திரு பாண்டியன் தனது வெள்ளைச் சட்டையில் விழுந்த மையைத் தடவியபடி, மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது, அவரின் அருகே இருந்த தாய்மார்கள் அவர்மீது இருந்த மையை தங்கள் கைகளால் துடைத்து, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

இந்த மைவீச்சு சம்பவம் தொடர்பாக கனாஸ் பகுதியை சேர்ந்த பாஸ்கர் சாகு என்பவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இருப்பினும், மை வீசப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இச்சம்பவத்திற்கு ஆளும் பிஜு ஜனதா தளக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தற்போது 77 வயதாகும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வயது மூப்பு காரணமாக அனைத்து அரசு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளதால், அந்த இடங்களுக்கு தமது தனிச்செயலாளரான திரு பாண்டியனை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்