புதுடெல்லி: இந்தியாவில் இன்ஸ்டகிராம் பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பதிவுகளில் பாலியல் ரீதியான தூண்டுதல், வன்முறை சார்ந்த உள்ளடக்கங்களைக் குறைக்கும் வகையில் தனது தொழில்நுட்ப அமைப்பில் மாற்றங்களைச் செய்துள்ளதாக ‘மெட்டா’ நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) தெரிவித்துள்ளது.
இணையத்தில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் மீதான கண்காணிப்பை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகள் பரிந்துரைக்கப்படுவதை மறுஆய்வு செய்யுமாறு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை ‘மெட்டா’ நிறுவனத்துக்கு அறிவுறுத்தி இருந்தது.
தவறான, திரிக்கப்பட்ட தகவல்கள், ஒருதலைப்பட்சமான கருத்துகள் அதிக அளவில் பரப்பப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி இருந்தது.
அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ‘மெட்டா’ நிறுவனம், பயனர்கள் பின்தொடராத கணக்குகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் பதிவுகளில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஒட்டுமொத்தத் தடையல்ல என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
பயனர்களின் கருத்துகளின் அடிப்படையில், கடந்த ஓராண்டாகப் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனால் இந்தியப் பயனர்கள் பரிந்துரைக்கப்படும் பதிவுகள் குறித்துப் புகார் அளிப்பது கடந்த ஆண்டைவிடப் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்திய அரசின் அறிவுறுத்தலுக்கும் இந்த மாற்றத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ‘மெட்டா’ குறிப்பிடவில்லை. இதற்கு முன்னதாக கனடா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் அரசியல் சார்ந்த பதிவுகளின் பரிந்துரைகளை மெட்டா நிறுவனம் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
