புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டு எப்போதும்போல் இல்லாமல் சற்றுக் குறைந்த அளவிலான மழைதான் பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் நீர்த் தேவை அதிகமாக உள்ள பயிர்களைப் பயிரிடாமல் மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
வறட்சியான பகுதிகளில் நெல் சாகுபடிக்குப் பதில் பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள், சிறுதானியங்கள் ஆகியவற்றைப் பயிரிட அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போதுவரை வழக்கமாகப் பெய்யவேண்டிய மழை 42 விழுக்காடு குறைந்துள்ளது. இதையடுத்து இந்திய அரசாங்கம் தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
சரியான திட்டமிடல் இல்லை என்றால் சாகுபடியில் நட்டம் ஏற்படும், விவசாயிகள் போதுமான லாபம் கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
“இந்தியாவின் 315 மாவட்டங்கள் வழக்கமான மழையை விடக் குறைவான மழையைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 111 மாவட்டங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன,” என்று வேளாண் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் செளகான் மாநில அதிகாரிகளுடனான இணையச் சந்திப்பில் கூறினார்.
மாவட்ட அளவிலான திட்டங்களை வகுத்து, நீர் வசதிகளுக்கு ஏற்ப பயிர்களைப் பயிரிட அதிகாரிகள் உதவுவார்கள்.
அதேபோல், நீர் மேலாண்மை, மழை இல்லாமல் போகும்போது எடுக்கவேண்டிய அவசரத் திட்டம் ஆகியவையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அரசாங்கம் நீர்ச் சேமிப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது. ஏரி, குளம், நீர்த்தேக்கம், அணை ஆகியவற்றைச் சரியான நிலையில் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அரசாங்கங்களும் அவர்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை மேற்கொள்ளுமாறும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தேவையான நீரைத் தயார் செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
பயிர்களுக்கான காப்புறுதி, விவசாயிகளுக்கான கடன், வருமான ஆதரவுத் திட்டம் ஆகியவற்றையும் இந்திய அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.
அரிசி, கோதுமை போதிய அளவில் கிடங்குகளில் இருக்கிறது என்றும் உணவுப் பாதுகாப்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

