இணையவழி விநியோக ஊழியர்களுக்குக் காப்புறுதி, ஓய்வூதியம்: புதிய விதிகளைச் சேர்க்க இந்திய அரசு திட்டம்

2 mins read
5ba0d03f-2b0c-4133-a3a8-8deb88f76116
இந்தியா முழுவதும் 1.27 கோடி பேர் இணையவழி விநியோக ஊழியர்களாகப் பணியாற்றுகின்றனர். - கோப்புப்படம்: டைம்ஸ் ஆப் இந்தியா

புதுடெல்லி: உணவு, மளிகை எனப் பல்வேறு பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியர்களின் நலன் கருதி, சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமேசான், ஃபிளிப்கார்ட், ஸ்விகி, சொமாட்டோ, செப்டோ போன்ற இணைய வர்த்தக நிறுவனங்கள் பொருள்களை விநியோகம் செய்யும் பணிக்காக ஊழியர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்துகின்றன.

இந்தியா முழுவதும் 1.27 கோடிப் பேர் அப்பணியில் உள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 2.35 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு பலன்கள் இல்லையென்பதால், அதனை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 22 நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநியோக ஊழியர்கள் அண்மையில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சமூகப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் விநியோகப் பணியாளர்கள் பல்வேறு பலன்களைப் பெறும் வகையில் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இணைய நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் குறைந்தது 90 நாள்கள் வேலை செய்திருந்தால், அவருக்கு மருத்துவக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி, ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு பலன்கள் வழங்க வேண்டும். பெண் ஊழியர் என்றால் அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைய வர்த்தக நிறுவனங்களுக்காகப் பணியாற்றுவோர், ஆண்டுக்கு 120 நாள்கள் வேலை செய்திருந்தால் இந்தப் பலன்களைப் பெறலாம்.

இந்தப் பலன்களைப் பெற, மத்திய அரசாங்கத்தின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான, ‘இ - ஷ்ராம்’ எனும் இணையத்தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இது தொடர்பாக ஊழியர்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டு, ஏப்ரலில் இந்த விதிகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்