புதுடெல்லி: கடந்த 2006ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரப்பட்டது.
இதில் ப.சிதம்பரம் விதிகளை மீறி அனுமதி வழங்கியதாகவும் அதன் மூலம் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பயனடைந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன. இது தொடர்பான வழக்கை டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு எதிராக ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது ப.சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர் என்.ஹரிஹரன் முன்னிலையாகி, மனுதாரர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால், முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அனுமதி இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது என வாதிட்டார். இதற்கு அமலாக்கத் துறையின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் இந்த மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கும் உத்தரவிட்டு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


