கோல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது.
அண்மையில் தெற்கு கோல்கத்தா பாஜக மாவட்டத் தலைவராக அனுபம் பட்டாச்சார்யா என்பவர் இரண்டாம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை வரவேற்று, பாராட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு அவரது ஆதரவாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோல்கத்தாவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
பட்டாச்சார்யாவுக்கு எதிராக பாஜகவுக்குள் ஒரு பிரிவினர் செயல்பட்டனர்.
அவர்கள், பாராட்டுக் கூட்டத்திற்குள் புகுந்து கூச்சல் போட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
நாற்காலிகளைத் தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசினர். அப்போது பட்டாச்சார்யாவை சிலர் தாக்கினர். அவரது சட்டையில் கறுப்பு மையை வீசினர்.
அந்தச் சம்பவத்தை விசாரித்த பாஜக தலைமை, தகராற்றில் ஈடுபட்ட நால்வரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உள்ளது.
நடந்த சம்பவம் பற்றி ஏழு நாள்களுக்குள் விளக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தாரும் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேற்கு வங்காள சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சியினர் ஒற்றுமை காக்க வேண்டும் அதில் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

