லண்டன்: சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு வழங்கப்படும் அனைத்துலக புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் திருவாட்டி பானு முஷ்தாக், 77.
லண்டன் மாநகரின் டேட் மாடர்ன் கலைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) நடந்த நிகழ்ச்சியில், ‘ஹார்ட் லாம்ப்’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு அவ்விருது வழங்கப்பட்டது.
“இந்தத் தருணம், ஆயிரம் மின்மினிப் பூச்சிகள் ஒன்றாகச் சேர்ந்து வானத்திற்கு ஒளியூட்டுவதுபோல் இருக்கிறது. ஒரு தனிமனிதராக அல்லாமல், மற்ற அனைவருடனும் சேர்ந்து எழுப்பிய ஒட்டுமொத்த குரலுக்காக மதிப்புமிக்க இவ்விருதை ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி பானு.
அவருக்கு 50,000 பவுண்டு (S$86,700) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. தமது நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தீபா பாஸ்தியுடன் பரிசுத்தொகையை அவர் பகிர்ந்துகொள்கிறார்.
1990 முதல் 2023 வரை திருவாட்டி பானு எழுதி வெளியிட்ட 12 கதைகள் ‘ஹார்ட் லாம்ப்’ நூலில் இடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரின் அன்றாட வாழ்வை, குறிப்பாக பெண்கள், சிறுமியரின் அனுபவங்களை அக்கதைகள் சித்திரிக்கின்றன.
வறண்ட, மென்மையாக இழையோடும் நகைச்சுவை; அதன் பேச்சு வழக்கு, நகைச்சுவை கலந்த பாணி; ஆணாதிக்கம், சாதிய, சமயப் பழைமைவாதம் ஆகிய கூறுகளுக்காக அந்நூலை விமர்சகர்கள் கொண்டாடுகின்றனர். விடாப்பிடியான உறுதியுடன் கூடிய பாட்டிமார்கள், பெரும் தவறிழைக்கும் சமய குருமார்கள் எனப் பலதரப்பட்ட அவரது கதைமாந்தர்களை நடுவர்கள் பாராட்டினர்.
“ஆங்கில வாசகர்களுக்கு உண்மையிலேயே புதிய அனுபவத்தைத் தரும் நூல்,” எனப் புகழ்ந்தார் நடுவர் குழுவின் தலைவர் திரு மேக்ஸ் போர்ட்டர். வழக்கறிஞரான திருவாட்டி பானு, பெண்ணுரிமைக்காகவும் பாகுபாட்டிற்கு எதிராகவும் சட்டபூர்வமாகக் குரல் கொடுத்து வருபவர்.
இதனிடையே, கன்னட மொழியின் பெருமையை உலகறியச் செய்துள்ளார் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, திருவாட்டி பானுவிற்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இது கன்னடத்தையும், கன்னடர்களையும், கர்நாடகாவையும் கொண்டாட வேண்டிய நேரம் என்றும் அவர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை அனைத்துலக புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் நெடும்பட்டியலில் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ புதினம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.