நியூயார்க்: எஃப்பிஐ-யால் தேடப்படும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் மன்னன் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டான்.
ஷெஹ்னாஸ் சிங் என்ற அந்தக் கடத்தல்காரன் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது தெரியவந்துள்ளது.
ஷெஹ்னாஸ் கைது செய்யப்பட்டதை பஞ்சாப் காவல்துறை தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டதுடன் அவனுக்குப் போதைப்பொருள் கடத்தலில் பங்குள்ளது என்றும் அமெரிக்காவின் எஃப்பிஐ-யால் தேடப்படுபவன் என்றும் தெரிவித்துள்ளது.
ஷெஹ்னாஸ் சிங்கின் மற்றொரு பெயர் ஷான் பிந்தர் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஓர் அங்கமாக ஷெஹ்னாஸ் கைது நடவடிக்கை அமைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
பஞ்சாப் மாநில காவல்துறை தலைவரின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவில் ஷெஹ்னாஸ் கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவன் பஞ்சாப் மாநிலத்தில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அந்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளான் ஷெஹ்னாஸ்.
முன்னதாக அவனது கூட்டாளிகள் அம்ரித் பால் சிங், தக்திர் சிங், சர்ப்சித் சிங், பெர்னான்டோ வல்லதரேஸ் ஆகியோர் அமெரிக்கக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டு பின்னர் கைதாகினர்.
காவல்துறை நடவடிக்கையின்போது அவர்களிடம் இருந்து 391 மெத்தபெட்டாமைன், 109 கிலோ கொகைன், 4 துப்பாக்கிகள், வாகனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஷெஹ்னாஸ் மீது பல்வேறு நாடுகளில் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.