நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் இவ்வாண்டிறுதிக்குள் அனைத்துலக விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி நித்து சம்ராவும் துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் ஷ்னெல்மன்னும் தெரிவித்துள்ளனர்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துடன் நடந்த நேர்காணலில் அவர்கள் இத்தகவலை வெளியிட்டனர். மேலும், வரும் திங்கட்கிழமை (ஜூன் 15) முதல் அந்த விமான நிலையத்தில் வர்த்தக விமானச் சேவைகள் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சேவைத் தொடக்கம், நீண்டகாலத்துக்கான நொய்டா விமான நிலையத்தின் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த அம்சங்கள் நேர்காணலில் பேசப்பட்டன.
எளிதில் சென்றடையும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் யமுனா நெடுஞ்சாலைக்கு நடுவே அது அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா வட்டாரத்திலிருந்து சுமார் 25 நிமிடங்களிலும் நொய்டா நகரிலிருந்து கிட்டத்தட்ட 45 நிமிடங்களிலும் விமான நிலையத்தைச் சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விமான நிலையத்தில் முதலில் இண்டிகோ அதன் சேவைகளை வழங்கத் தொடங்கும். அதன் பின்னர் ஜூன் 16ஆம் தேதி ஆகாசா சேவைகளை வழங்க ஆரம்பிக்கும்.
சேவை வழங்குவது குறித்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றுடனும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

