லக்னோ: இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக நம்பப்படும் அனைத்துலகப் பயங்கரவாதக் குழுவினரை மத்திய புலனாய்வுக் குழுக்கள் கைதுசெய்துள்ளன.
பிடிபட்டவர்களில் அறுவர் உக்ரேனைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அமெரிக்கர். இவர்கள் மியன்மர் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) தொழில்நுட்பப் பயிற்சி அளித்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
டெல்லி, லக்னோ, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கைது செய்யப்பட்ட எழுவரும் தற்போது 11 நாள்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.
புலனாய்வுத் தகவல்களின்படி, இவர்கள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வந்து, உரிய அனுமதியின்றி மிசோரம் வழியாக மியன்மர் எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ராணுவ ட்ரோன்களை இயக்குவது குறித்துப் பயிற்சி அளித்ததுடன், ஐரோப்பாவிலிருந்து ட்ரோன்களை இந்தியா வழியாக மியன்மருக்குக் கடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லக்னோ ஹோட்டல் உரிமையாளர் அளித்த தகவல் இவர்களைக் கண்டறிய முக்கியப் பங்காற்றியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 18வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குப் பின்னால் இருக்கும் வெளிநாட்டுச் சக்திகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினர்.

