தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் வேண்டுகோளுக்கு இன்டர்போலின் முதல் வெள்ளி ஆணை

2 mins read
59b9e99f-8a78-477e-a760-26c433cb9b41
இன்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் சின்னம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: முன்னாள் பிரெஞ்சுத் தூதரக அதிகாரியின் உலகளாவிய சொத்துகளைக் கண்காணிக்க இந்தியா, இன்டர்போல் எனும் அனைத்துலகக் காவல்துறையிடம் கேட்டுக்கொண்டிருந்தது.

அதற்கு இணங்க ‌ஷுபம் ‌ஷோகீன் எனும் அதிகாரியின் உலகளவில் வைத்திருக்கக்கூடிய சொத்துகளைக் கண்காணிக்க இன்டர்போல் முதன்முறையாக இந்தியாவுக்கான வெள்ளி ஆணையைப் (Silver notice) பிறப்பித்துள்ளதாக அதிகாரிகள் கூறினர் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது. ‌ஷுபம் ‌ஷொகீன், விசா மோசடி தொடர்பாக தேடப்பட்டுவருகிறார்.

வெள்ளி ஆணை, உலகளவில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோதச் சொத்துகள் இடம் மாறுவதைக் கண்காணிக்க இன்டர்போல் பிறப்பிக்கும் நிறம் சார்ந்த உத்தரவுக் கட்டமைப்பின் ஓர் அங்கமாகும். அது, கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தப் புதிய திட்டத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அதன்கீழ் இத்தாலியின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் வெள்ளி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நிறம் சார்ந்த உத்தரவுக் கட்டமைப்பில் ஒன்பது நிறங்களுக்கான ஆணைகள் அடங்கும். உலகளவில் உள்ள உறுப்பு நாடுகளிடமிருந்து குறிப்பிட்ட தகவல்களைப் பெறுவது ஒவ்வோர் ஆணையின் இலக்காகும்.

சிவப்பாணை, தப்பியோடியவரைத் தடுத்து வைப்பதற்கானது. நீல ஆணை கூடுதல் தகவல் பெறுவதற்கானது. கறுப்பாணை அடையாளங்காணப்படாத உடல்களுக்கானது. மஞ்சள் ஆணை காணாமற்போனவர்களுக்கானது.

வெள்ளி ஆணை பிறப்பிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டத்தில் பங்கேற்கும் 51 உறுப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்நடவடிக்கை வரும் நவம்பர் மாதம் வரை தொடரும்.

அதன்படி ஒவ்வோர் உறுப்பு நாட்டுக்கும் ஒன்பது வெள்ளி ஆணைகள் வரை பிறப்பிக்கப்படலாம்.

நல்ல சொத்துகளாக மாற்றப்படும் கள்ளச் சொத்துகள் குறித்து தகவல் பெறுவதுதான் வெள்ளி ஆணையின் இலக்கு என்று இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு செவ்வாய்க்கிழமை (மே 27) அறிக்கையில் தெரிவித்தது. கட்டடங்கள் மற்றும் நிலங்கள், வாகனங்கள், நிதிக் கணக்குகள், வர்த்தகங்கள் போன்றவை அத்தகைய சொத்துகளில் அடங்கும்.

கிடைக்கும் தகவல்களைக் கொண்டு நாடுகள் இருதரப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். சம்பந்தப்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்வது, மீட்பது அல்லது அத்தகைய சொத்துகளை மீட்க வேண்டுகோள் விடுப்பது அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும் என்று இந்திய மத்தியப் புலனாய்வுப் பிரிவு விவரித்தது.

குறிப்புச் சொற்கள்