சோன்பத்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவலர்களிடம் இருந்து தப்பிக்க, சாலையில் பணத்தை விசிறியடித்து திரைப்பட பாணியில் தப்பிக்க முயன்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.49 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உ.பி. மாநிலம், சோன்பத்ரா பகுதியில் காவலர்கள் வழக்கமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு ஹோண்டா சிட்டி சொகுசு கார் காவலர்கள் தடுத்து நிறுத்துவதையும் பொருட்படுத்தாமல் அதிவேகமாகச் சென்றது.
இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் உடனடியாக அந்தக் காரை தங்களது வாகனத்தில் பின்தொடர்ந்து விரட்டினர்.
இதையடுத்து கடத்தல் கும்பல், தங்களது காரால் காவலர்களின் வாகனத்தை அடுத்தடுத்து பலமுறை பலமாக இடித்துத் தள்ளியது. இதில் காவலர்களின் வாகனம் பழுதடைந்து நடுவழியில் நின்றது.
எனினும், சற்றும் தளராத காவலர்கள் அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவரின் காரை அவசரமாகப் பெற்றுக்கொண்டு, கடத்தல்காரர்களை மீண்டும் விரட்டிச் சென்றனர்.
காவலர்களின் பிடியிலிருந்து தப்பிக்க அந்தக் கும்பல் ஒரு நூதன வழியைக் கையாண்டது.
பொதுமக்கள் பணத்தை எடுப்பதற்கு ஓடிவந்தால் காவலர்களின் துரத்தல் நடவடிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டை ஏற்படும் எனக் கணக்குப் போட்டு, தாங்கள் கட்டுக்கட்டாக வைத்திருந்த 100 ரூபாய் நோட்டுகளைச் சாலையில் விசிறி வீசினர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், பொதுமக்களோ அல்லது காவலர்களோ அந்தப் பணத்தைச் சட்டை செய்யாமல் தங்களது வேட்டையைத் தொடர்ந்தனர்.
ஒரு கட்டத்தில் தப்பிக்க வழியில்லாததால், கடத்தல் கும்பல் காவலர்கள்மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கியது.
இதற்குப் பதிலடியாகக் காவலர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கடத்தல்காரர்களில் ஒருவனுக்குக் காலில் குண்டு பாய்ந்தது. உடனடியாகச் சுற்றி வளைத்த காவலர்கள் காரில் இருந்த கும்பலைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.49 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள், ரூ.50,000 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இக்கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குப் போதைப்பொருள்களைக் கடத்திச் செல்ல முயன்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல பலமுறை அவர்கள் வெற்றிகரமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து சோன்பத்ரா காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

