புதுடெல்லி: உலகம் முழுவதும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கான ‘ஓசிஐ அட்டை’ மின்னிலக்க வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ‘இ-ஓசிஐ’ அட்டையை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.
மின்னிலக்க ஓசிஐ அட்டை அறிமுகம் கண்டிருப்பதால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இருபது வயதுக்குப் பிறகு ஓசிஐ கையேட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் இராது.
ஓசிஐ அட்டை வைத்திருப்பவர்கள் இ-ஓசிஐ அட்டைக்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. பெரும்பாலும் அவர்கள் மின்னணு முறையிலேயே அதனைப் பெற்றுக்கொள்ள முடியும். நேரடிச் சரிபார்ப்பு அதற்குத் தேவைப்படாது.
தற்போதைய ஓசிஐ அமைப்பில் நீடித்து வந்த சிக்கல்கள் மின்னிலக்க அட்டையில் சரிசெய்யப்பட்டுள்ளதால், ஏறத்தாழ ஐந்து மில்லியன் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அதனை நிம்மதியாகப் பயன்படுத்த முடியும்.
ஓசிஐ வைத்திருப்பவர்கள் 20 வயதுக்குப் பிறகு புதிய கடப்பிதழைப் பெறும்போது ஓசிஐ கையேட்டைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயமுறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அந்தக் கையேட்டை மீண்டும் வழங்கவேண்டிய தேவை இருக்காது. மேலும், ஓசிஐ அட்டை வைத்திருப்பவரின் பதிவு எண் தனித்துவமானதாக இருக்கும்.
பொதுச் சேவை வழங்கல் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உற்துறை அமைச்சு அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்த இ-ஓசிஐ அட்டை பார்க்கப்படுகிறது.
முற்றிலும் இணையம் வாயிலான செயல்பாடுகளை ‘இ-ஓசிஐ’ முறை உறுதிசெய்கிறது. காகிதப் பயன்பாடு மற்றும் நிர்வாகச் செலவுகளை அது குறைக்கிறது.
மேலும், தரவு நிர்வாகம் மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பை அது வலுப்படுத்துகிறது.
அடையாளத்தைச் சரிபார்ப்பது எளிதாக இருக்கும். அத்துடன், ஓசிஐ அட்டைப் பாதுகாப்பு மேம்படும். அதன் மூலம் மோசடி நிகழ்வதற்கான அபாயம் குறையும் என்று அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஓசிஐ’ என்பது இந்திய வெளிநாட்டுக் குடியுரிமைத் திட்டத்தின்கீழ் வருகிறது. ‘பிஐஓ’ என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளியினராகப் பதிவுசெய்துகொள்வதற்கான வசதியை அந்தத் திட்டம் வழங்குகிறது.
‘ஓசிஐ’ என்பதை இரட்டைக் குடியுரிமை என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த அட்டை வைத்திருப்பவர்கள், இந்திய அரசியலமைப்பின் 16ஆவது பிரிவின்கீழ் இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் உரிமைகளைப் பெறமாட்டார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது.

