புதுடெல்லி: இஸ்ரேல்-ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இரு நாடுகளும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன. அங்கு வசிக்கும் வெளிநாட்டு மக்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பிக்கொண்டு உள்ளனர். இதற்கு அந்தந்த நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்திய அரசும் ஈரானிலிருந்து நூற்றுக்கணக்கான குடிமக்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் ஆப்பரேஷன் சிந்து நடவடிக்கையின்கீழ் இதுவரை வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஐந்தாவது தொகுதியாக 290 இந்தியர்களை ஏற்றி வந்த சிறப்பு விமானம் டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். தாங்கள் பாதுகாப்பாக திரும்பியது குறித்து இந்திய அரசாங்கத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்தனர்.
‘இந்தியா வாழ்க, பிரதமர் மோடி வாழ்க’ என அவர்கள் தேசியக் கொடியுடன் மகிழ்ச்சியாக முழக்கமிட்டனர்.
தெஹ்ரானில் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு வாரம் பயம் நிலவியதாக பலரும் விவரித்ததுடன், அரசாங்கம் மற்றும் தூதரக அதிகாரிகளின் முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
ஈரானில் பதற்றமான சூழல் நிலவுவது குறித்த தங்கள் அனுபவங்களை வெளியேற்றப்பட்டவர்கள் பகிர்ந்துகொண்டனர். சிலர் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக தாங்கள் எதிர்கொண்ட பயம் பற்றி விவரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மீட்கப்பட்டு டெல்லி வந்து இறங்கியவர்களில் ஒருவரான மிஸ்மான் என்னும் மாணவி செய்தியாளர்களிடம் பேசினார்.
“ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்தது முதல் பாதுகாப்புக்காக ஒவ்வோர் இடமாக மாறிச் சென்றதாகக் கூறினார்.
“டெஹ்ரானில் இருந்து கோம், பிறகு அங்கிருந்து மஷாத் என்று ஏறத்தாழ 450 கிலோமீட்டர் கடந்த பின்னர் இந்திய மீட்பு விமானத்தில் ஏறினோம். வந்த வழியெங்கும் சடலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. விமானத் தாக்குதலையும் நாங்கள் கண்டோம்,” என்றார் மிஸ்பான்.
ஈரானின் டெஹ்ரானில் இருந்து மஷாத் என்ற இடத்துக்கு மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் 1,000 பேர் அழைத்துவரப்பட்டனர். அவர்களில் 256 பேரை சனிக்கிழமை இரவு ஈரான் விமானமான மஹான் ஏர்லைன்ஸ் ஏற்றிக்கொண்டு டெல்லி வந்தது.
அவர்களில் 190 பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை அழைத்துச் செல்ல ஜம்மு காஷ்மீர் காவலர்களும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தனர். மீட்கப்பட்டவர்களில் புனித யாத்ரிகர்களும் அடங்குவர்.
ஈரானின் இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க அணுசக்தி நிலையத்தை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த வெளியேற்றம் நடைபெறுகிறது.