இந்தியா உட்பட ஐந்து நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறந்த ஈரான்

இந்தியா உட்பட ஐந்து நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணையைத் திறந்த ஈரான்

2 mins read
a9afbf46-a5fe-4270-be87-bf732a6754e6
இந்தியா தருவிக்கும் கச்சா எண்ணெய்யில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை இந்தியா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் பயன்படுத்த ஈரான் அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடனான மோதல் காரணமாக அந்த நீரிணையை ஈரான் அண்மையில் முடக்கியது.

இதனால், உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு, உரம் போன்ற பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.

இந்நிலையில், ஈரான் தரப்பிலிருந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட ஐந்து நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான வழித்தடத்தில் பயணிப்பதை ஈரான் உறுதி செய்யும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அபாஸ் அராக்சி அந்நாடு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். எனவே, எங்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் நாடுகள், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகள் ஆகியவற்றின் கப்பல்களை அனுமதிக்க முடியாது. ஆனால், எங்களுடன் இணக்கமான உறவைக் கொண்டுள்ள நட்பு நாடுகளுக்கு ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கும்,” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் முன்னரே ஒருங்கிணைந்து, உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியா தருவிக்கும் கச்சா எண்ணெய்யில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு இந்த நீரிணை வழியாகவே வருகிறது.

கடந்த சில வாரங்களாக ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த கிட்டத்தட்ட 28 இந்தியக் கப்பல்கள் இந்த அனுமதியின் மூலம் பாதுகாப்பாக நாடு திரும்பத் தொடங்கியுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் ஈரான் தலைவர்களுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த பலனாக இது பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்