இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

சவூதி அரேபியாவிலிருந்து 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் மும்பை வந்தடைந்த முதல் கப்பல்

இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

2 mins read
4dbf1cbe-92f9-460d-baae-e2d875da6c3a
ஷென்லாங் சூயஸ்மாக்ஸ் என்ற சரக்கு கப்பல் 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் புதன்கிழமை (மார்ச் 11) பிற்பகல் ஒரு மணி அளவில் மும்பைத் துறைமுகத்தை வந்தடைந்தது. - படம் ஜம்மு லிங்ஸ்

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையில் பதற்றம் நிலவும் நிலையில் இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதியளித்துள்ளது.

எனினும், அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

“ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க விரும்பும் அனைத்து கப்பல்களும் ஈரானிடம் முன் அனுமதி பெற வேண்டும், இல்லையெனில் அவை மீது தாக்குதல் நடத்தப்படும்,” என்று ஈரானின் கடற்படைத் தளபதி அலிரேசா தாங்சிரி சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எச்சரிக்கையை மீறிச் செல்ல முயன்ற இரு கப்பல்கள் புதன்கிழமை தாக்கப்பட்டன.

தற்போது அந்தப் பகுதியில் உள்ள 28 இந்தியக் கப்பல்களையும், அவற்றில் பணியாற்றும் 778 இந்திய மாலுமிகளையும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இதற்காக பிப்ரவரி 28 முதல் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மார்ச் 8 ஆம் தேதி ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் மிகுந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, கப்பலின் சமிக்ஞை போன்ற தொழில்நுட்பச் சாதனங்களை கப்பல் பணியாளர்கள் அணைத்துள்ளனர். நீரிணையைப் பாதுகாப்பாக கடந்த பிறகு, மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் அவை செயல்பட்டுள்ளன.
மார்ச் 8 ஆம் தேதி ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் மிகுந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, கப்பலின் சமிக்ஞை போன்ற தொழில்நுட்பச் சாதனங்களை கப்பல் பணியாளர்கள் அணைத்துள்ளனர். நீரிணையைப் பாதுகாப்பாக கடந்த பிறகு, மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் அவை செயல்பட்டுள்ளன. - படம்: மாத்ருபூமி

சவூதி அரேபியாலிருந்து முதல் கப்பல் வந்தது

ஈரான் போர் தொடங்கிய பிறகு சவூதி அரேபியாவிலிருந்து முதல்முறையாக மும்பை துறைமுகத்துக்கு எண்ணெய்க் கப்பல் புதன்கிழமை (மார்ச் 11) வந்தடைந்தது.

இந்திய கேப்டன் தலைமையிலான குழு இயக்கிய லைபீரிய நாட்டுக் கொடி கொண்ட எண்ணெய்க் கப்பல், சவூதி அரேபியாவின் ராஸ் தனுரா துறைமுகத்தில் மார்ச் 1ஆம் தேதி கச்சா எண்ணெய்யை ஏற்றியுள்ளது. இரு நாள்களுக்குப் பின்னர் பயணத்தைத் தொடங்கிய கப்பல், பாதுகாப்பாக மும்பைத் துறைமுகம் வந்து சேர்ந்தது.

கேப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 இந்திய, பாகிஸ்தான், பிலிப்பீன்ஸ் நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் வந்துள்ளனர்.

கப்பலில் வந்துள்ள 1,35,335 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய், கிழக்கு மும்பை, மஹுலில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

குறிப்புச் சொற்கள்