ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இரு இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இரு இந்தியக் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

2 mins read
b1aa3a03-73e6-4ffe-a092-b4fd351f4499
ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல்கள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கொடி ஏந்திய இரு திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் நிலவிவரும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் எரிவாயுவைச் சுமந்துவரும் அந்த இரு கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துசெல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெயர்கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்கா - ஈரான் மோதல் தொடங்கிய பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானும் முதன்முறையாகத் தொலைபேசி வாயிலாகப் பேசினர்.

அதேபோல் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்பேச்சுவார்த்தை நடந்த சில மணி நேரங்களிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் பெசெஷ்கியானுடனான உரையாடலின்போது, இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு குறித்தும் தடையற்ற சரக்கு, எரிசக்தி போக்குவரத்தின் தேவை குறித்தும் பேசியதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தியாவும் ஈரானும் நண்பர்கள்’

முன்னதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 13) செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஈரானியத் தூதர் முகம்மது ஃபதாலி, ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்பதைக் கோடிகாட்டியிருந்தார்.

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு அவ்வழியாகவே நடைபெறுகிறது.

“ஈரானும் இந்தியாவும் நண்பர்கள். நமக்குப் பொதுவான நலன்களும் பொதுவான விதியும் உள்ளன,” எனக் கூறிய ஃபதாலி, போர்ச் சூழலுக்குப் பிறகு இந்திய அரசு தங்களுக்குப் பல்வேறு துறைகளில் உதவியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணைக்கு மேற்கே நிறுத்தப்பட்டுள்ள மற்ற இருபதுக்கும் மேற்பட்ட இந்தியக் கொடி ஏந்திய கப்பல்களின் பாதுகாப்பான பயணம் குறித்து இந்தியா, ஈரானுடன் தொடர்ந்து பேசிவருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்