புதுடெல்லி: உலகப் பொருளியல் நலனை உறுதிசெய்ய ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட அனைத்துலகக் கடல் பகுதிகளில் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து முக்கியம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் வியாழக்கிழமை (மே 14) தொடங்கிய பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான இரு நாள் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய ஜெய்சங்கர், ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் ஹோர்முஸ் நீரிணை, செங்கடல் வழியிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கவலை தெரிவித்தார்.
இந்தத் தடைகளால் எரிசக்திச் சந்தையில் வரலாறு காணாத பெரும் சீர்குலைவு ஏற்பட்டுள்ளதோடு, உலகளாவிய பணவீக்கமும் பொருளியல் வீழ்ச்சி குறித்த அச்சமும் மேலோங்கியுள்ளது என்றார் அவர்.
2026ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தை இந்தியா வகிக்கும் நிலையில், ஆக்ககரமான, நிலைத்தன்மையான பங்கை பிரிக்ஸ் வகிக்க வேண்டும் என்பதே வளர்ந்து வரும் நாடுகளின் எதிர்பார்ப்பு என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் இடையே போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், ஒருமித்த கருத்தை எட்டுவது சவாலாக உள்ளது.
போருக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டிற்கும் கடும் கண்டனம் தெரிவிக்க பிரிக்ஸ் நாடுகளை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கோரினார்.
அனைத்துலகச் சட்டங்களுக்கு மாறாகத் தன்னிச்சையாக விதிக்கப்படும் தடைகள் வளரும் நாடுகளைப் பெரிதும் பாதிப்பதாகவும், அழுத்தங்களுக்குப் பதிலாக அரசதந்திரமே தீர்வாக அமைய வேண்டும் என்றும் திரு ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
எரிசக்திப் பாதுகாப்பு, உள்ளூர் நாணயங்களில் வணிகம் செய்வது போன்றவை க்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

