புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் தாக்குதல் தொடர்பான விவகாரங்கள் எதிரொலிக்கக்கூடும்.
அந்த இருநாள் மாநாடு வியாழக்கிழமை (மே 14) புதுடெல்லியில் தொடங்குகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவதற்கும் கூட்டறிக்கையை வெளியிடுவதற்கும் உள்ள திறனைச் சோதிப்பதாக ஈரான் போர் விவகாரம் அமையும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளே தொடக்கத்தில் அங்கம் வகித்தன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனீசியா, ஈரான், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகியன அதில் இணைந்தன. அதனால் அந்தக் கூட்டமைப்பு விரிவடைந்தது.
இருநாள் கூட்டத்தை ஏற்று நடத்தும் இந்தியா, பிரிக்ஸ் கூட்டமைப்பின் இவ்வாண்டுக்கான தலைமைத்துவத்தை வகிக்கிறது. வளைகுடா வட்டார மோதலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயல்களுக்கு எதிராகக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்துமாறு இந்தியாவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலால் உருவான போரில் ஈரானும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் எதிரெதிர் திசையில் உள்ளன. அத்துடன், அவற்றுக்கு இடையே வேறுபாடுகள் எழுந்துள்ளன.
அதனால், ஐக்கிய அரபு சிற்றரசுகள் சார்பாக அந்தக் கூட்டத்தில் யார் கலந்துகொள்வார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரானியத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் சவூதி அரேபியாவும் அண்மையில் ஈரான்மீது ராணுவத் தாக்குதலை நடத்தியதாக வெளியான தகவல் பிரிக்ஸ் கூட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முதல்நாளே வந்து சேர்வார் என்று கூறப்பட்டது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லேவ்ரோவும் பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

