ஈரான் போர் எதிரொலி: உள்நாட்டுச் சேவைகளைக் குறைக்கும் ஏர் இந்தியா

ஈரான் போர் எதிரொலி: உள்நாட்டுச் சேவைகளைக் குறைக்கும் ஏர் இந்தியா

2 mins read
04aae249-5643-486b-abd9-e80f0193cfaf
ஏர் இந்தியா விமானச் சேவை. - படம்: டாடா குழுமம்

புதுடெல்லி: மத்திய கிழக்குப் பூசல் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தாங்கள் வழங்கும் உள்நாட்டு விமானச் சேவைகளைக் குறைக்க அல்லது ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (மே 27) தெரிவித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கின. அதிலிருந்து ஈரான், ஹோர்முஸ் நீரிணையைக் கிட்டத்தட்ட முழுமையாக முடி வைத்துள்ளது.

அதனால் விமானத் துறையில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. அதனையொட்டி விமான நிறுவனங்களால் லாபம் ஈட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இப்பிரச்சினையால் விமானக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

“ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில அனைத்துலகச் சேவைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தோம். இப்போது சில உள்நாட்டுச் சேவைகளிலும் தற்காலிகமாக மாற்றம் செய்திருக்கிறோம்,” என்று ஏர் இந்தியா சொன்னது.

“எரிபொருள் விலை அதிகரிப்பு ஒட்டுமொத்தச் செயல்பாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இந்த மாற்றங்களைச் செய்யத் தூண்டியிருக்கின்றன,” என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.

மேல்விவரங்கள் இல்லை

எந்தெந்தப் பாதைகள், எத்தனை விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என்பதை ஏர் இந்தியா தெரிவிக்கவில்லை. அந்நிறுவனம் வழங்கிவரும் உள்நாட்டுச் சேவைகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானவை பாதிக்கப்படக்கூடும் என்று பிடிஐ செய்தி நிறுவனம் சிலரை மேற்கோள்காட்டி தெரிவித்தது.

மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு விமானங்களுக்கு மாற்றிவிடப்படுவர் அல்லது அவர்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்று ஏர் இந்தியா சொன்னது.

“நிலைமை சீராகும்போது விமானச் சேவைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவரும் நோக்கில் ஏர் இந்தியா தொடர்ந்து பயணத் தேவைகளையும் செயல்பாட்டு முறைகளையும் உன்னிப்பாகக் கண்காணிக்கும்,” என்றும் அந்நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்