புதுடெல்லி: அமெரிக்கா-ஈரான் இடையேயான போரின் எதிரொலியாக, இந்தியாவில் சமையல் எரிவாயு உருளை (சிலிண்டர்) விலை அதிகரித்துள்ளது.
குடும்பப் பயன்பாட்டுக்கான உருளை விலை 60 ரூபாய் அளவு உயர்த்தப்பட்ட நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான உருளையின் விலை 115 ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு மார்ச் 6ஆம் தேதி நள்ளிரவு அமலுக்கு வருவதாக அறிவிப்பும் வெளியானது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதல் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் எரிவாயு உருளை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான உருளை ரூ.115ஆகவும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டுக்கான உருளை ரூ.60ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
புதிய விலையின்படி, சென்னையில் வீட்டுப் பயன்பாட்டிற்கான உருளை ரூ.928.50க்கும் வணிக பயன்பாட்டிற்கான உருளை ரூ.2,043க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே இரவில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் நடுத்தர குடும்பங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு ஆசியாவில் பதற்றங்கள், உலகளாவிய எண்ணெய் வழித்தடங்கள் குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு மத்தியில் இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, நாட்டின் எரிபொருள் விநியோகம் நிலையானதாக இருப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நுகர்வோருக்கு உறுதியளித்தார்.
“எங்கள் குடிமக்களுக்கு மலிவு விலையில் மற்றும் நிலையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறை இல்லை, மேலும் நுகர்வோர் கவலைப்பட எந்த காரணமும் இல்லை,” என்று பூரி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


