சிறப்பு விமானம் மூலமாக இந்தியாவிலிருந்து கிளம்பிய ஈரானியக் கடலோடிகள்

சிறப்பு விமானம் மூலமாக இந்தியாவிலிருந்து கிளம்பிய ஈரானியக் கடலோடிகள்

2 mins read
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கொச்சியில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது
d8f5c668-48c2-43e2-9b66-9af37e4d6335
கொச்சித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் லாவன்’. - படம்: ராய்ட்டர்ஸ்

கொச்சி: கேரள மாநிலத்தின் கொச்சித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானியப் போர்க்கப்பலின் பெரும்பாலான ஊழியர்கள் சிறப்பு விமானம் மூலமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 13) பின்னேரத்தில் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவசரத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஈரானிய அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, மார்ச் 1ஆம் தேதிமுதல் ‘ஐரிஸ் லாவன்’ கப்பலைக் கொச்சியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, மார்ச் 4 முதல் கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ள அக்கப்பலில் 183 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கடற்படை மாணவர்கள் என்பதால் அவர்கள் அங்குள்ள இந்தியக் கடற்படை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கப்பலில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், குறிப்பிட்ட சில ஊழியர்கள் மட்டும் அங்கேயே தங்கியிருப்பர் என்றும் மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டது.

அவ்வகையில், துருக்கியிலிருந்து வந்ததாக அறியப்படும் சிறப்பு விமானம், இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கும் சென்று, மாண்டுபோன ‘ஐரிஸ் தேனா’ ஊழியர்களின் உடல்களையும் ஏற்றிக்கொண்டு, ஆர்மீனியாவிற்குச் செல்லும் எனச் சொல்லப்பட்டது.

அங்கிருந்து சாலை வழியாக ஈரானியக் கடலோடிகள் தங்கள் நாட்டிற்குச் செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பல் மூலமாக அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ‘ஐரிஸ் தேனா’ கப்பல் பெருஞ்சேதமடைந்து, கடலில் மூழ்கியது. அக்கப்பலில் இருந்த ஊழியர்கள் 32 பேரை இலங்கைக் கடற்படை உயிருடன் மீட்டது. மாண்ட 84 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 12) இரவு ஈரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, மற்றோர் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் புஷெர்’ இலங்கைக் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்