புதுடெல்லி: ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா அமைப்பின் செயலி, இணையத்தளம் இரண்டுமே வியாழக்கிழமை (டிசம்பர் 26) முடங்கின.
இதுகுறித்து பயணிகள் பலர் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்து வந்தனர் என்று ஏஷியனெட் நியூஸ் (Asianet News) போன்ற ஊடகங்கள் தெரிவித்தன. தங்களால் நுழைவுச்சீட்டுகளுக்கு முன்பதிவு (தட்கல்) செய்யமுடியவில்லை என்றும் பலர் கருத்து பதிவிட்டனர்.
தங்களின் தொழில்நுட்பப் பிரிவு பிரச்சினையை கூடுமானவரை விரைவில் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐஆர்சிடிசி தெரிவித்தது என்று நியூஸ்18 போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டன.
ஐஆர்சிடிசி தளத்தைப் பயன்படுத்த முயன்றவர்கள், ‘சரிபார்ப்பு (maintanence) நடவடிக்கைகளால் இச்செயலில் ஈடுபட முடியாது,’ என்ற பொருளைக் கொண்ட ஆங்கில வார்த்தைகளைக் கண்டனர். சரிபார்ப்பு நடவடிக்கைகள் காரணமாகத்தான் தனது தளங்கள் முடங்கியிருந்தன என்று ஐஆர்சிடிசி உறுதிப்படுத்தியது.
தங்களின் ரயில் நுழைவுச்சீட்டுகளைப் பயன்படுத்த விரும்பாத பயணிகள், தனது பயனர் கவனிப்புப் பிரிவை (customer care) அழைத்துத் தெரியப்படுத்தலாம் அல்லது நுழைவுச்சீட்டு விவரங்களை மின்னஞ்சல்வழி அனுப்பலாம் என்று ஐஆர்சிடிசி சொன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டது.
ஐஆர்சிடிசி, இந்திய ரயில்வே அமைப்பின் மின்னிலக்கப் பிரிவாகும்.

